NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 14 May 2017

நாளை முதல் நற்றிணையில் சிலப்பதிகார விருந்து

📚📚📚📚📚📚📚
*நாளை முதல் நற்றிணையில் சிலப்பதிகார விருந்து*

தி இந்து நாளிதழில் 7.5.2017 அன்று வெளியான நற்றிணை பற்றிய கட்டுரையை
வாசித்துவிட்டு காரைக்குடியிலிருந்து ஒரு அழைப்புமணி ஒலித்தது. எடுத்துப்
பேசியபொழுது முதுபெரும் தமிழறிஞரின் குரல் எதிர்முனையில் பேசியது.

ஆம்.

பேராசிரியர் இராம.இராமநாதன் அவர்கள் நற்றிணை இணையதளத்தை
பார்வையிட்டுவிட்டு வாழ்த்து தெரிவித்தார்கள். நேரில் வந்து வாழ்த்த
வேண்டும் என்று முகவரி கேட்டார்கள். கடலைநோக்கி ஆறுகள் ஓடுவதுதான்
இயற்கை. எனவே தங்களை நேரில் வந்து சந்திக்கிறோம் என்று கூறி காரைக்குடியை
நோக்கி பயணித்தோம். அறிவும் அனுபவமும் முகத்தில் பிரகாசிக்க தமிழ்ச்
சமுத்திரமாகக் காட்சியளித்தார்கள் ஐயா.

நற்றிணைக்கென்று ஒலிப்பதிவு அரங்கம் கிடையாது. தினந்தோறும் நிகழ்ச்சிகள்
அளித்துக் கொண்டிருக்கும் பங்களிப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்தது
கிடையாது. பார்வை மாற்றுத் திறனாளிகள் பெரும்பான்மையாக இதில் பங்கு
வகிக்கிறார்கள். வாட்ஸப் மூலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டு 700 நாட்களைக்
கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம் -என்று நற்றிணையின்
செயல்பாடுகள்பற்றி கூறியதும் வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள்.

*திரு.இராம.இராமநாதன் அவர்களைப் பற்றி:*

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் 07.07.1933-ல் பிறந்தவர். சென்னை
இலயோலாக் கல்லூரியில், கல்லூரி இடைநிலை வகுப்பு பயின்றபோது ஆனந்தவிகடன்
திரு.பாலசுப்ரமணியம் மற்றும் தி இந்து நாளிதழின் வெளியீட்டாளர்
திரு,ரெங்கராஜன் ஆகியோருடன் பயிலும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பயின்றபோது பேரா.கரும்பாயிரம்,
வளவன் பாண்டியன்,  அ.சிதம்பரநாதன், கா.மீனாட்சி சுந்தரனார்,
க.வெள்ளைவாரணனார், மு.அண்ணாமலை, ரா.பி.சேதுப்பிள்ளை. மு.வ., தெ.பொ.மீ.,
இரா.சாரங்கபாணி போன்ற பேராசிரியர்களிடம் கல்விபயிலும் பேறிணைப் பெற்றவர்.

பாவேந்தர் பாரதிதாசன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா,
அன்புப் பழம் நீ, கண்ணதாசன், காந்தி கண்ணதாசன், நெடுஞ்செழியன், தவத்திரு.
குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழ்ச் சான்றோர்களுடன் நெருங்கிப் பழகி
தமிழைச் செம்மைப்படுத்திக் கொண்டவர்.

சாலமன் பாப்பையா, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர்.மீரா, கவிஞர்
நா.காமராசன். சட்டமன்ற முன்னாள் தலைவர் காளிமுத்து, நீதியரசர்
எம்.சொக்கலிங்கனார், துணைவேந்தர் க.திருவாசகம் என இவரிடன் கல்வி பயின்ற
மாணாக்கர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு
இவர்களின் இல்லங்களில் விருந்துக்காக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.

இன்றும் தனது வழிகாட்டிகளாகப் போற்றும் சிலர் பேரா.கா.மீனாட்சி
சுந்தரனார், முன்னைத் துணைவேந்தர் க.ப. அறவாணன். பேரா.முனைவர் தமிழண்ணல்
ஆகியோராவர்.

இத்தனை சிறப்புகளையும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் தனது
85-வது வயதிலும் மிகவும் தெளிவாக சிந்திக்கிறார். எறும்பைவிட
சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அயல்நாட்டு மாணவர்களுக்கு இணையம் வழியாக
தமிழ்ப்பாடம் கற்றுத் தருகிறார்.

இத்தனை பணிகளுக்கிடையிலும் நற்றிணைக்காகவும் உலகத் தமிழ்
உள்ளங்களுக்காகவும் தானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று முன்வந்தார்,
ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை விவரிக்கும் சிலப்பதிகாரம் என்னை
வெகுவாகக் கவர்ந்த காவியம். தினந்தோறும் நற்றிணை வழியாக ஐந்து
நிமிடங்களுக்கு சிலப்பதிகார விருந்துபடைக்கிறேன். நற்றிணை
இணையதளத்திலும், நற்றிணை இணைய வானொலியிலும் ஒலிபரப்புவீர்களா என்று
கேட்டார்.

கரும்பு தின்னக் கூலி கேட்போமா?  தானாக வரும் மகாலஷ்மியை வேண்டாமென்று மறுப்போமா?

உடனடியாக ஒலிப்பதிவு செய்யும் முறை, நற்றிணைக்கு அனுப்பும்முறைகள்
குறித்து விளக்கியதும் கற்பூரமாய் பற்றிக்கொண்டார்.

இலக்கியத் தரமான பதிவுகள் நற்றிணையில் இல்லையே என்ற குறை ஐயா அவர்களால்
நீக்கப்பட்டுவிட்டது. எனவே வைகாசி 1-ம் தேதி (15.5.2017) முதல்
திரு.இராம.இராமநாதன் ஐயா அவர்களின் குரலில் நமது நற்றிணையில் சிலப்பதிகார
விருந்து தினமும் படைக்கப்படுகிறது.

தமிழ்ப் பெருங்கடல் இணையம் வழியாக நம் செவிகளில் பாய்ந்து உலகத் தமிழ்
உள்ளங்களை தாலாட்ட வருகிறது. தமிழமுதம் பருகுவோம். தமிழ்ச்
சமுத்திரத்தில் முத்தெடுப்போம்.

இந்த நிகழ்ச்சி குறித்த கருத்துக்களை நேயர்கள் அவ்வப்பொழுது வழங்கி ஐயா
அவர்களை உற்சாகப்படுத்தி மேலும் பல காவியங்களை படைக்கச் செய்வோம்.

நன்றி கலந்த வணக்கங்களுடன்
நற்றிணைக் குழு
www.natrinai.org
📚📚📚📚📚📚📚📚

No comments:

Post a Comment