டீசல் விலையை ஜிஎஸ்டி.க்குள் கொண்டு வர வலியுறுத்தி 20ம் தேதி லாரிகள் வேலைநிறுத்தம்
கோவை: டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 20ம் தேதி லாரிகள் ஓடாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. அப்போது, வரும் 20ம் தேதி முதல் நடைபெற உள்ள அகில இந்திய லாரிகள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவை லாரி உரிமையாளர்கள் பங்கேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை 75 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 20ம் தேதி காலை 6 மணி முதல் 4 லட்சத்துக்கு மேற்பட்ட லாரிகள் ஓடாது என்று கூறினார். விரைவில் டேங்கர் லாரி, கண்டெய்னர் லாரி, மினி ஆட்டோ உரிமையாளர்களும் தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்றும், வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். டீசல் விலை ஏற்றம், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS