#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 27 July 2018

கோபக்கார முனிவர்!

கோபக்கார முனிவர்!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒரு காட்டில் சுதீவர் என்ற முனிவர் கடுந்தவம் செய்து வந்தார். அந்தப் பக்கம் வந்த இரு காட்டுவாசிகளில் ஒருவன், திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மற்றொருவன், தவத்திலிருந்த முனிவரை எழுப்பி உதவி கேட்டான்.
தன் தவம் கலைந்த கோபத்தினால் முனிவர் காட்டுவாசியை சாம்பலாகப் போகும்படி சபித்தார். அந்தக் கணமே அந்தக் காட்டுவாசி எரிந்து சாம்பலாக, மயக்கம் தெளிந்து எழுந்த மற்றொருவன் தனது சகாவின் நிலையைக் கண்டு கதறி அழுதான்.
இதற்குள் கோபம் தணிந்த முனிவரிடம், மற்றொரு ஆள் சாபத்தை நீக்குமாறு வேண்ட, “எனக்கு சாபம் கொடுக்கத் தெரியுமே தவிர, சாபத்திலிருந்து மீட்கத் தெரியாது. நான் என் குரு சுசாந்தரிடம் அதைக் கற்று வருகிறேன். நீ அதுவரை உன் நண்பனின் சாம்பலை பத்திரமாகப் பாதுகாத்து வா!” என்று சொல்லிவிட்டு தன் குருவைத் தேடிச் சென்றார் சுதீவர்.

தன் குருவிடம் சென்று நடந்தவற்றை விளக்கி பரிகாரம் கேட்டார் குரு சுசாந்த முனிவர்.
“மனிதனின் முதல் விரோதி அவனது கோபம்தான். நீ கொடுக்கும் சாபத்தினால் உன் தவவலிமை குறைந்து விடும். உன் தவவலிமை முழுதும் தியாகம் செய்தால் உன் சாபத்தைத் திரும்பப் பெறலாம்!” என்றார். அதற்கு இணங்காமல் வேறு யோசனை சொல்லும்படிக் கேட்டார்.
“சுதீவா! விஷ்ணுபுரத்தில் மாதவன் என்ற புண்ணியாத்மா இருக்கிறான். அவன் இல்லறத்தில் இருப்பவன். அவனிடம் சென்று அவன் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானமாகப் பெற்றுக்கொள். அதைக் கொண்டு அந்தக் காட்டுவாசியை உயிர்ப்பிக்கலாம்!” என்றார்.
சுதீவர் அந்த மாதவனைத் தேடிச் சென்றார். செல்லும் வழியில் மிக அழகான ஒரு இளம் பெண் தென்பட்டாள். அவள் அழகிலே கிறங்கிப் போய் அவளையே உற்றுப் பார்க்க, அதனால் கோபமடைந்த அந்தப் பெண், “முனிவரான நீ என் போன்ற பெண்ணை இப்படி உற்றுப் பார்க்கலாமா? உனக்கு வெட்கமாக இல்லையா?” என்றுகேட்டதும், சுதீவருக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று.
“அடி பெண்ணே! உன் அழகினால் தானே உனக்கு இவ்வளவு கர்வம்? நீ அழகற்ற அவலட்சணமான பெண்ணாக மாறுவாய்!” என்று சபிக்க அந்தப் பெண்ணும் அவ்வாறே மாறிவிட்டாள்.
(ச.க.ம.25.7.18🙏🙏)
பிறகு சுதீவர் விஷ்ணுபுரத்தை அடைந்தார். வழியில் ஒரு இளைஞனிடம் மாதவனது வீட்டுக்கு வழி கேட்டார்.
ஆனால் அவன், “மாதவனுடைய பெண் மிக அழகானவள். அதனால்தான் அவன் வீட்டுக்கு வழி கேட்கிறாயா? உன்னைப் போன்ற முனிவருக்கு இது தேவையா?” என்று திமிராகக் கேட்டான். அவனை ஊமையாக வேண்டும் என்று சுதீவர் சபித்துவிட்டு ஒருவாறு மாதவனின் வீட்டைக் கண்டு பிடித்தார்.
சுதீவரை மாதவன் வரவேற்று அமரச் செய்தார். “என் குருவான சுசாந்தர் தங்களை ஒரு புண்ணியவான் என்றார். நீங்கள் அப்படி என்ன தவம் செய்து, என் குருவே புகழும்படி புண்ணியம் சம்பாதித்தீர்கள்?” என்று கேட்டார்.
“காலையில் எழுந்து என் நித்திய கடன்களை முடித்து விட்டு, வீட்டு வேலைகளிலும் வெளி வேலைகளிலும் பங்கேற்கிறேன். எல்லாருக்கும் என்னாலான உதவிகளைச் செய்கிறேன். கோபம், பொறாமை, ஆசை இவற்றை விட்டொழித்து மனதினாலும், வாக்கினாலும், உடலினாலும் பலருக்கும் நன்மை புரிகிறேன்!” என்றார் மாதவன்.
பூஜை, புனஸ்காரம், தவம் இவை எதுவுமே செய்யாமல் இவனுக்கு எப்படி புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் சுதீவர், “நீங்கள் கடவுளை தியானம் செய்வது கிடையாதா?” என்றார்.
“கடவுள் என்னிலும் இருக்கிறார்.

 மற்றவர்களிடமும் இருக்கிறார். சகல உயிர்களிலும் உறைகிறார். அவரைத் தனியாக பூஜையோ, தியானமோ ஏன் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கு உதவி செய்தாலே, அது கடவுளுக்காக செய்யப்படும் பூஜை, தியானம், தவம் அனைத்தும் ஆகும்!” என்றார் மாதவன். சுதீவருக்கு மாதவன் தன்னை ஏளனம் செய்கிறார் எனத் தோன்றியது.
“நீர் நான் செய்யும் தவமெல்லாம் வீண் வேலை என்று பொருட்படக் கூறுகிறீரா?” என்று கோபத்துடன் சுதீவர் கேட்டார்.
“சுவாமி! நான் உங்களைப் பற்றியோ, உங்கள் தவத்தைப் பற்றியோ குறை கூறவில்லை. நான் என்னுடைய கருத்தைக் கூறுகிறேன்!” என்றார் மாதவன் பணிவுடன்.
கோபத்துடன் குதித்து எழுந்தார் சுதீவர். “உன்னைப் போன்ற நாஸ்திகனை மன்னிக்கவே கூடாது. இந்த நிமிடத்திலிருந்து நீ கண்பார்வை இழந்து நடக்க முடியாமல் படுக்கையில் வீழ்வாய்!” என்று சாபமிட்டார்.
ஆனால், மாதவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் மாதவன் பணிவுடன், “சுவாமி! சாந்தம் அடையுங்கள். உங்களைப் போன்ற மகான் கோபம் அடையும்படி நான் பேசியது தவறுதான்!” என்று மன்னிப்புக் கேட்டார்.
“மாதவா! என் சாபம் உனக்குப் பலிக்கவில்லை. நீ என்ன மகாத்மாவா?” என்றார் சுதீவர்.

சுவாமி! அப்படியில்லை. காட்டுவாசி, அழகான இளம்பெண், வழியில் கண்ட இளைஞன் ஆகியோருக்கு சாபம் கொடுத்து தங்கள் தவவலியை நஷ்டமாகிவிட்டது. நான் மட்டுமில்லை இனி நீங்கள் யாருக்கு சாபம் கொடுத்தாலும் அது பலிக்காது. போகட்டும் நீங்கள் என்னிடம் பெற வந்த புண்ணியத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு இப்போது நான் அளிக்கிறேன்.
“அந்தப் புண்ணியத்தினால் நீங்கள் சாபமிட்டவர்கள் எல்லாருக்கும் இந்தக் கணத்திலிருந்து சாபம் நீங்கிவிடும்.

உங்கள் தவவலிமையை இந்த வினாடியிலிருந்து நீங்கள் மீண்டும் பெற்று விட்டீர்கள். நீங்கள் விரும்பினால் இப்போது எனக்கு சாபம் கொடுக்கலாம். அது பலிக்கும்!” என்றார்.
தனது செய்கைகளினால் அவமானம் அடைந்த சுதீவர் மாதவனுக்கு நன்றி கூறிவிட்டு மவுனமாக தன் குருவைத் தேடிச் சென்றார். வரும் வழியில், தான் சாபமிட்டவர்கள் மறுபடியும் தன் நிலைக்கு மாறி இருப்பதை அவர் கண்டார். தனது குரு சுசாந்தரிடம் நடந்தவற்றைக் கூறி அதற்கு விளக்கம் கேட்டார்.
“தவத்தினால் பல சக்திகளை அடையலாம்.

ஆனால், தன் கடமையைச் சிறப்பாக செய்பவனும், பிறருக்கு உதவி செய்வதையே லட்சியமாகக் கொண்டவனுமான ஒரு மனிதன் ஒரு தவயோகியை விட அதிகப் புண்ணியம் செய்தவன் ஆகிறான்!” என்றார்.
“குருவே! இப்போது மாதவன் தான் செய்த புண்ணியத்தை தானம் செய்து விட்டான். ஆகையால் அவனுடைய சக்தியும் குறைந்து விடும் அல்லவா?” என்று சுதீவர் சந்தேகம் கேட்டார்.
“மற்றவர்களுக்காகத் தன் புண்ணியத்தையே தானம் செய்தால் அதுவே பெரிய புண்ணியம். மாதவனின் சக்தி குறையவில்லை. முன்னைவிட இப்போது அதிகமாகி விட்டது!” என்றார் சுசாந்த முனிவர்.
“குருவே! முன்னைவிட என் தவவலிமையை அதிகமாக்குவேன். நான் மீண்டும் காட்டுக்குத் தவம் புரியச் செல்கிறேன்!” என்று கூறி விடை பெற்றார் சுதீவர்...
நட்புடன்! !!!!!!!

No comments:

Post a Comment