Thursday, 16 August 2018

வானுயர்ந்த வாஜ்பாய்: தேசத்தை ஒளிரச் செய்த 'தங்க மகன்'...

வானுயர்ந்த வாஜ்பாய்: தேசத்தை ஒளிரச் செய்த 'தங்க மகன்'...

சுதந்திர போராட்ட வீரர், சொற்பொழிவாளர், சமூக சேவகர், கவிஞர், பத்திரிகையாளர், பார்லிமென்டேரியன், நேர்மையான அரசியல்வாதி, அனைவரையும் வசீகரிக்கும் வல்லமை, உயர் பதவியிலும் பரிசுத்தம் என பல்வேறு பெருமைக்குரியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.

'அடல்ஜி'என தொண்டர்களால் அழைக்கப்பட்ட வாஜ்பாய், பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். பிரம்மச்சரிய வாழ்க்கையைக் கடைப்பிடித்த இவர், காந்திய சோஷலிசத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக திகழ்ந்தார். 1924 டிச.25ல் கிருஷ்ண பிகாரிக்கு மகனாக, மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்தார். கான்பூரில் டி.ஏ.வி., கல்லுாரியில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை பயின்ற பின், சட்டம் பயிலுவதற்காக லக்னோ பல்கலையில் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இடையிலேயே படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று.

ஆர்.எஸ்.எஸ்.,

கடந்த 1941ல் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைந்தார். 1942ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டார். பாரதிய ஜனசங்க நிறுவன தலைவரான ஷியாம் பிரசாத் முகர்ஜியின் உண்மை சீடராக இவர் இருந்ததுடன், அவருடைய கனவையும் நிறைவேற்றி வைத்த பெருமைக்கும் உரியவர்.

முதல்முறை எம்.பி.,

1956ல் பாரதிய ஜனசங்கத்தின் செயலாளரானார். 1957ல் பல்ராம்பூரில் (உ.பி.) இருந்து முதல்முறை எம்.பி., ஆனர். ஆர்.எஸ்.எஸ்.சில் செல்வாக்கு மிகுந்த தலைவரான தீன்தயாள் உபாத்யாயாவின் மறைவுக்குப் பின், 1968ல் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரானார். 1973 வரை அப்பதவியில் இருந்தார். 1973 - 1977 வரை தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தான் ஜனதா கட்சியில் பாரதிய ஜனசங்கம் இணைந்தது. 1977 - 79 வரை, மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சரானார். பா.ஜ., தலைவர் பின் 1980ல் ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, பாரதிய ஜன சங்கத்திலிருந்து வந்த, வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் பா.ஜ.,வை நிறுவினர். 1980 - 86 வரை பா.ஜ., தலைவராக இருந்தார். 

கடந்த 1996 தேர்தலில் பா.ஜ., தனிப்பெருங்கட்சியானது. பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். மெஜாரிட்டி இல்லாததால் நம்பிக்கை ஓட்டெடுப்பு தினத்தன்று, விவாத இறுதியில், ஓட்டெடுப்புக்கு வாய்ப்புஅளிக்காமலேயே ராஜினாமா செய்தார். இதனால் குறுகிய காலமே (13 நாட்கள்) பதவி வகித்த பிரதமர் என்ற பெயரைப் பெற்றார்.'நிலையான அரசு, திறமையான பிரதமர்' என்ற கோஷத்தை 1998 தேர்தலில் பா.ஜ. முன்வைத்து, வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்தது. மீண்டும் கூட்டணி அரசே மத்தியில் வந்ததால் அரசின் ஸ்திரத்தன்மையே வாஜ்பாய்க்கு சவாலாக இருந்தது.
வாஜ்பாய் பதவியேற்றவுடன் சந்தித்த பிரச்னை தன்னுடைய கூட்டணி கட்சிகளுக்குள்ளே இருந்து தான். வெவ்வேறு கொள்கைகளை உடைய மம்தா பானர்ஜி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜெயலலிதா, பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரிடமிருந்து வந்த நிர்ப்பந்தங்கள் நெருக்கடிகளை சமாளிக்க வேண்டிய சிக்கலான சூழ்நிலையிலேயே வாஜ்பாயின் நாட்கள் கழிந்தன.

ஒரு ஓட்டில்

இதற்கிடையில் 1998 மே 11ல் இந்தியா நடத்திய அணு ஆயுதச் சோதனைகள் வாஜ்பாய்க்கு உலக அரங்கில் பெருமதிப்பைத் தேடித்தந்தது. அதே நேரத்தில் சி.டி.பி.டி. விஷயத்தில் உறுதியாக நின்றதோடு, அமெரிக்காவின் பொருளாதாரத் தடையையும் துணிவுடன் எதிர்கொண்டார். திடீரென அ.தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றதால், 1999 ஏப்., 17ல், நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், ஒரு ஓட்டில், வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. 

ஐந்து ஆண்டு பின் அடுத்த வந்த தேர்தலில், பா.ஜ., மீண்டும் தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்தது. 1999 அக்., 13ல் மூன்றாவது முறை பிரதமரானர். இம்முறை ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். கடந்த 1999ல் கார்கில் போரில் பாகிஸ்தானை தோற்கடித்தது இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது. 'தங்க நாற்கர சாலை' திட்டத்தை அறிமுகப்படுத்தி, சாலை போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தினார். பதவி காலத்தில் ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு இடமில்லாமல் அரசியல் பரிசுத்தமானவர்களில் ஒருவராக பரிமளித்தார்.

புத்தகங்கள்

ராஷ்டிர தர்மா, பாஞ்சஜன்யா, வீரஅர்ஜுன் ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தார். அமர்பாலிதான், மிருத்யுயா ஹாத்ரா, ஜனசங், மஸல்மான் கைத்தி குண்டலியான், இந்திய வெளியுறவுக் கொள்கையின் புதிய பரிமாணங்கள் ஆகிய புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

பத்ம விபூஷன் (1992), கான்பூர் பல்கலையின் கவுரவ டாக்டர் பட்டம் (1993), சிறந்த பார்லிமென்டேரியன் விருது (1994), பத்ம பூஷன் (1992) , லோகமான்ய திலகர் புரஸ்கார் (1994), கோவிந்த வல்லவபந்த் விருது (1994), பாரத ரத்னா (2015), வங்கதேச விடுதலை போர் விருது (2015) உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

No comments:

Post a comment