Tuesday, 30 July 2019

புதுக்கோட்டையில் பிறந்த முத்துலெட்சுமி ரெட்டி

புதுக்கோட்டையில் பிறந்த முத்துலெட்சுமி ரெட்டி

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும்.அப்படிப்பட்ட ஒரு ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் நாட்டிலேயே ,அதுவும் நம் சென்னையிலேயே மிகத்தரமான சிகிச்சையை பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் ஒரு பெண், *இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்.*

ஆண்டவனின் படைப்புகளில் அதி அற்புதமான படைப்பாக ஒரு பெண் குழந்தை ஒன்று 1886-ம் ஆண்டு,ஜூலை மாதம் 30-ம் நாள் புதுக்கோட்டையில்,
நடுத்தரமான குடும்பம் ஒன்றில் பிறந்தது. *இந்த குழந்தை தான் புற்று நோய் என்னும் அரக்கனுக்கு எதிராக போராடப் போகிறது என்று யாரேனும் அன்று சொல்லியிருந்தால் ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள்*.

*“மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”* -என்ற கவிமணியின் கூற்றிற்கு ஏற்ப தோன்றியவர்,இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சமூகசேவகி,பெண்களின் சிறுமையை போக்கவும்,அவர்கள் மேன்மையடைய தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மாமேதை, *சுதந்திரப் போராட்ட தியாகி* ,சிறந்த மருத்துவர்.அவர் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

1922-ம் ஆண்டு அவரின் தங்கை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தார்.தங்கையின் நோயால் மனம்மிக வருந்தி,அவரின் இறுதிகாலம் வரை அவருடனே இருந்து அவருக்கு வைத்தியம் செய்தார்.இதனால் மனம் வருந்தி ,கொடுமையான புற்று நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற விழுமிய நோக்கத்துடன் 1936-ம் ஆண்டில் இதற்கென ஒரு பெரும் இயக்கத்தை நடத்தினார். *புற்றுநோய்க்கு ஒரு தனி மருத்துவமனையை ஏற்படுத்த முயன்று இதற்காக 2 லட்சம் ரூபாய் நிதிதிரட்டினார்*.இவரது முயற்சியின் பயனாக சென்னை அடையாற்றில் 1952-ம் ஆண்டு,முன்னால் பாரதப் பிரதமர் பண்டித நேரு அவர்களால் புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.1954-ல் இது செயல்படத் துவங்கியது.இன்று ஆசியாவிலேயே புற்றுநோய் மருத்துவத்தில் புகழ்மிக்க ஒரு மருத்துவமனையாக இது திகழ்கிறது.இம்மருத்துவமனை டாக்டர் முத்து லட்சிமி ரெட்டி மனித இனத்திற்கு விட்டுச்சென்றுள்ள மிகப்பெரிய சொத்து.

மேலும் இவர் 1930-ல் *“அவ்வை இல்லம்”* என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார்.இன்று இந்த இல்லம் பல நூற்றுக்கனக்கான பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் ஒரு சரணாலயமாக திகழ்கிறது.மகாத்மா தலைமையிலான இந்திய விடுதலை இயக்கத்திலும்,உலகத்தில் எங்கெல்லாம் மகளிரின் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டதோ,அந்த இயக்கங்களிலும் முத்துலெட்சுமி ரெட்டி ஆர்வம் கொண்டிருந்தார்.பெண்கள் கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்படுவதை[பொட்டு கட்டுதல்] தடைசெய்யும் சட்டத்தை நிறைவேற்றினார்.

*புதுக்கோட்டையில் பிறந்து இத்தனை சிறப்புகளையும் பெற்ற இவரின் புகழ் புதுக்கோட்டைக்கே உரியது.* 
இவரின் நினைவாக புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு”டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை”என தமிழக அரசு பெயர் சூட்டியிருக்கிறது.இந்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

*தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி!*

பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. தமிழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி, தமிழகத்தின் முதல் பெண் சட்டசபை உறுப்பினர் என்ற பெருமைகளுக்குரியவர். அவரது வாழ்க்கை வரலாற்றுத் துளிகளை இங்கே பார்ப்போம்…

சமூகப் போராளி, தமிழ் ஆர்வலர் என போற்றப்படும் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டையில் 1886-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் நாராயண சாமி, சந்திரம்மாள்.

சிறுவயதில் இருந்தே கல்வியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 1907-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்தார். 1912-ல் பட்டம் பெற்று தமிழகத்திலேயே மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.

சமூகப் பணியிலும் ஆர்வம் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அன்னிபெசன்ட் அம்மையார் நிறுவிய பிரம்மஞான சபையை நடத்தினார். தமிழ் இசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, ஊழியர் களுக்கான ஊதிய உயர்வு என சமூக வளர்ச்சி போராட்டங்களை நடத்தினார்.

டாக்டர் முத்துலட்சுமி லண்டனில் உள்ள ‘செல்சியா மருத்துவமனை’யில் தாய்-சேய் மருத்துவ ஆராய்ச்சியும், புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்தார். இவர் பெண்களுக்கான ‘ஸ்திரீ தர்மம்’ என்னும் மாத இதழிலும் பணிபுரிந்தார்.

1926-ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி கலந்து கொண்டார். அப்போது ‘ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்துவதை ஒழிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

முதல் பெண்கள் இயக்கமான ‘இந்திய மாதர் சங்கத்தை’ தொடங்கி பெண்களை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றார்.

*தமிழக சட்டசபைக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை டாக்டர் முத்துலட்சுமியையே சேரும்.*

அவர் 1925-ம் ஆண்டில் சட்டசபை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற புரட்சிகர சட்டங்களை நிறைவேற்றினார்.

‘அவ்வை இல்லம்’ என்ற அமைப்பை உருவாக்கி ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்தார்.

பெண் விடுதலைக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் போராடிய இவருக்கு ‘ஆல்டர் உமன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. மத்திய அரசு ‘பத்ம விபூஷன்’  பட்டம் வழங்கி கவுரவித்தது.

டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டி 1968-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி தனது 82-வது வயதில் மறைந்தார்.

No comments:

Post a comment