--> #தூத்துக்குடி - ஒரு வரலாற்று பார்வை | Whatsapp Useful Messages

#தூத்துக்குடி - ஒரு வரலாற்று பார்வை

தூத்துக்குடி - ஒரு வரலாற்று பார்வை 

வரலாறு
தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னனின் அரசாட்சியின் கீழ் இருந்தது. முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி1532ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனை தொடர்ந்து கி.பி1658ல் டச்சு நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல்டச்சு நாட்டவரிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெணியினை நிறுவினார்கள்.
20ம் நூண்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் ஆங்கிலேயினரின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயிர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டியகட்டப்பொம்மன்,மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள். வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக கி.பி.1907ம் ஆண்டு சூன் 1ம்தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.
பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாகிய இத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கு கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி உள்ளது கி.பி.1864ம் ஆண்டு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கப்பல்களில் வாணிபம் செய்யப்பட்டது. தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு,பருத்திநூல்,சென்னா இலைகள்,பனைபொருட்கள், நார், உலர்மீன்கள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேலும் இத்துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, கொப்பரைகள், பருப்புவகைகள் மற்றும் தானியவகைகளும் இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துறைமுகம் நாட்டின் 10வது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு 1மில்லியன் சரக்குகளை கையாள்கிறது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இத்துறைமுகநகரம் மன்னார்வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரை கன்னியாகுமரி வரை தொடர்ந்து நாட்டின் எல்லையாகவும் அமைந்துள்ளது. தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதியில் மானாவாரி குளங்கள் அமைந்துள்ளது. நகரின் தென்பகுதி செம்மண் நிறைந்த பகுதியாகவும் சிவந்த அடுக்குபாறைகளாகவும் அதன் துகள்களாகவும் அமைந்துள்ளது. இந்நகரம் மிதமான தட்பவெட்ப நிலையை கொண்ட பகுதியாகும். சிறய அளவிலான தீவுகளும் ஆபத்தான முனைகளையும் கொண்ட இவ்வளைகுடா பகுதி புயல் மழை போன்றவற்றிலிருந்து உள்நாட்டவரை பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சி திட்ட துறை தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள 29 கிராமங்களை நகர்புற வளாச்சி திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.

சுற்றுலா தலங்கள்

தூத்துக்குடி
திருச்செந்தூர்
மணப்பாடு
கழுகுமலை
ஒட்டப்பிடாரம்
எட்டயபுரம்
பாஞ்சாலங்குறிச்சி
கயத்தாறு
நவதிருப்பதிகள்.

வழிபாட்டிடங்கள்

திருச்செந்தூர் முருகன் கோவில்
மணப்பாடு புனித சிலுவை ஆலயம்
கழுகுமலை முருகன் கோவில்
நவதிருப்பதிகள்
திருவைகுண்டம்
பெருங்குளம்
வரகுணமங்கை
திருப்புளியங்குடி
தொலைவில்லி
மங்களம்
தென் திருப்பேரை
திருக்கழுவூர்,
ஆழ்வார் திருநகர்

தூத்துக்குடி

இந்தியாவின் தொழில்முக வாயிலாக மும்பை இருப்பது போல தமிழகத்தின் வாயிலாக இன்று தூத்துக்குடி சர்ச் திகழ்கிறது. முத்து அதிகம் குளிப்பதால் 'முத்து நகர்' எனப்படுகிறது. போர்த்துகீசியர்கள் இப்பகுதியில் இருந்த காரணத்தால் இங்குள்ள கிருத்தூவர்களின் பெயர்கள் மச்சாடோ, பெர்ணாண்டோ, கர்டோசா, மஸ்கரனேஸ், மெரேரா, மேத்தா, கோமஸ் போன்ற போர்த்துகீசிய நாமங்கள் இன்றும் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். டச்சுக்காரர்கள் இருந்ததற்கடையாளமாக கடற்கரை சாலைக்கு நேராக பல டச்சுக் காரர்களின் சமாதிகள் காணப்படுகின்றன. ஆங்கிலேயர் காலத்தில கல்வி, மருத்துவம் வணிகம் முதலியவை வளர்ந்தன. நகரம் கீழூர், மேலூர் என இரண்டு பகுதிகளையும் பலநகர்களையும் கொண்டது. கீழூரில் துறைமுகமும் அதைச் சார்ந்த பகுதிகளையும் கொண்டது. மேலூர் சிவன் கோயில், பெருமாள் கோயில், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், வணிகத் தலங்களையும் கொண்டது. உப்பு காய்ச்சுதல், மீன்பிடித்தல், முத்துக்குளித்தல் ஆகிய தொழில்கள் இங்கு சிறந்துள்ளன. பருத்தி அரைக்கும் ஆலை, நெல் அரைக்கும் ஆலைகள், மரம் அறுக்கும் தொழிற்சாலைகள், பருப்பு உடைக்கும் ஆலைகள், பழைய சாக்குகளை பேலாக்கும் இயந்திர ஆலைகள் இவ்வூரில் மிகுந்துள்ளன.
தூத்துக்குடி துறைமுகம்
இது ஒரு இயற்கைத் துறைமுகம். மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ளது. இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குத் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் வாயிலாக விளங்குகிறது. 1963-ஆம் ஆண்டு 5 கோடி ரூபாய் அனுமதியோடு ஆழ்கடல் துறைமுக அமைப்பு தொடர்ந்தது. கடல் அரிப்பை தடுக்க வடபுறச்சுவர் 4103 மீ நீளம் கொண்டது. இது உலகத்திலேயே அதிக நீளமான அலைத் தடுப்புச் சுவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1974-ஆம் ஆண்டு ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1975 முதல் 84 வரை 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்றே நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்க 5கி.மீ. தொலைவிற்கு தானியங்கியும் 1983-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 700 லி பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்ய 'மெரைன் அன்லோடிங் ஆர்மஸ்' என்ற சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது. துறைமுகத்தின் வருமானம் இன்று 30 கோடிக்கு மேல் வளர்ந்துள்ளது.
முத்துக்குளித்தல்
1955-இலிருந்து தூத்துக்குடியில் முத்துக் குளிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. 2000 பேருக்கு மேல் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் முதல் மே மாதம் வரை முத்துக் குளிப்பில் ஈடுபடுகின்றன. மற்ற நாட்களில் ஒரு வித சொறி ஏற்படுகிறது. இங்கு எடுக்கப்படும் முத்துக்கள் தரத்துடன், நல்ல எடையை கொண்டதாகும். இதனால் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

சங்கு எடுத்தல்

முத்துக் குளிப்பு நடைபெறாத மாதங்களில் சங்கெடுப்பில் ஈடுபடுகின்றனர் 100 அடி ஆழம் சென்று சங்கு எடுக்கப்படுகிறது. அரசாங்கத்தின் நேரடிப்பார்வையில் சங்கு எடுப்பவர்களும், சங்கு படிந்து கிடக்கும் இடங்களைக் காட்டுபவர்களும் பணியாற்று கின்றனர். உயர்தரச் சங்கை 'ஜாதிச்சங்கு' என்பர். இது பெரியளவில் கிடைக்கிறது. வலம்புரிச்சங்கு எப்போதாவது கிடைக்கும். இடிந்தகரை, உவரி, புன்னைக் காயல் முதலிய இடங்களில் சங்கு எடுக்கப்படுகிறது.
ஸ்பிக் உரத் தொழிற்சாலை
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்பிக் உரத்தொழிற்சாலை 1975-ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இன்று யூரியா உற்பத்தியில் 100 வீதத்தை அடைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உரத்தின் அளவு இந்திய அளவில் 25% ஆகும்.

கோவில்பட்டி

மக்கள் கோவில் கட்டி குடியேறியதால் இப்பெயர் பெற்றது. விருதுநகர்-மணியாச்சி இரயில் பாதையில் அமைந்துள்ள முக்கிய நகரம். இவ்வூரில் இரண்டு பெரிய நூற்பாலைகளும், பருத்தி அறைக்கும் தொழிற்சாலையும் ஏராளமான தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் உள்ளன. இங்குள்ள வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணை விவசாய வளர்ச்சிக்குப் பணியாற்றுகின்றது. உருட்டுக் கம்பி முதலிய எஃகுப் பொருள்கள் செய்யும் நிறுவனமும் உள்ளது. திங்கள் சந்தை கூடுகிறது. கருவாட்டு வியாபாரத்தில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கண்டிப் பருத்தி கோவை, மதுரை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. விளையாட்டுத் துறையில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது. சிறப்பாகச் சிலம்பத்திற்கு பெயர் பெற்றது.

எட்டையபுரம்

எட்டப்பன் என்ற பாளையக்காரரின் பெயரால் அமைந்தவூர். இவனும், இவன் பின் தோன்றல்களுமே வெள்ளையர்களை ஆதரித்து, கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தவர்கள். இதற்கு பரிசாக இவர்களுக்கு 114 சிற்றுர்கள் கிடைத்தன. எட்டையபுரத்தில் உள்ள 18-ம் நூற்றாண்டு ஜமீன் அரண்மனைக் காணத்தகுந்தது. பாரதியார் வீடு, பாரதி மண்டபம், பாரதியார் கையெழுத்துச் சுவடி, நூலகம், அரண்மனை ஆகியவை இங்கு பார்க்கத் தக்கவை. ஆயுத பூசையன்று பாஞ்சாலங்குறிச்சி போரில் பயன்படுத்தப்பட்டப் போர்க் கருவிகளைப் பொதுமக்கள் பார்க்கலாம். கூட்டுறவுத் துறை, தனியார் துறைகளால் நடைபெறும் பருத்தி அறைக்கும் ஆலைகள் உள்ளன. இவ்வூரின் கைத்தறிச் சேலைகள் பல மாநிலங்களால் பெரிதும் வாங்கப்படுகின்றன. சனிக்கிழமைச் சந்தைநாள். இவ்வூர் ஆட்டுச் சந்தை புகழ் பெற்றது.

ஆற்றூர்

தாமிரபரணியாறு இவ்வூருக்கருகில் கடலுடன் கலக்கிறது. தை, ஆடி அமாவாசைகளில் மக்கள் இங்கு நீராடுவார்கள். தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய சேனாவரையர் இவ்வூர்காரர். அவர் அளித்த கொடை விபரங்கள் இங்குள்ள பெருமாள் கோவிலில் உள்ளது. இங்கு நெல், வாழை, கொடிக்கால் மிகுதி.

ஆலந்தலை

மீன்பிடி தொழிலால் சிறந்து விளங்குகிறது. அனைவரும் கிருத்தவ மதத்தினர். இது ஒரு காலத்தில் டச்சுக்காரர்களுடன் மிகுந்த தொடர்பு கொண்டிருந்த ஊராகும்.

ஆறுமுக நேரி

இவ்வூருக்குத் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டிலேயே அதிக உப்பு விளையும் இடங்களில் இதுவும் ஒன்று. உப்பள ஊழியர் கூட்டுறவுச் சங்கம், சிறப்பாக இயங்கி வருகின்ற காரணத்தால், உப்பு வணிகமும் செழிப்பாக நடைபெறுகிறது; பெருமளவு கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் ஏற்றுமதியாகிறது.

ஆழ்வார் திருநகரி

ஸ்ரீவைகுண்டம் - நாசரேத் இரண்டிற்கும் நடுவே அமைந்துள்ள இரயில் நிலையம். இது புகழ்பெற்ற வைணவத்தலம். இவ்வூர் சிறந்த வியாபாரத் தலமாகவும் விளங்குகிறது.

ஆதிச்ச நல்லூர்

பாளையங்கோட்டை - ஸ்ரீவைகுண்டம் சாலையில் இவ்வூர் உள்ளது. 1876-இல் தொல் பொருள் துறையினரால் பெரிய தாழிகள் போர்க்கருவிகள், பாத்திரங்கள், பெட்டிகள், நகைகள், எலும்புக் கூடுகள் முதலியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய நாகரிக வளர்ச்சியை அறிந்து கொள்ள ஆதிச்ச நல்லூர் அரியதோர் இடமாக விளங்குகிறது. மொகஞ்சதாரோ - ஆதிச்ச நல்லூர் கால முதுமக்கள் தாழிகளை ஒப்பிடும் போது ஆதிச்ச நல்லூர் கால நாகரிகமே முற்பட்டது என்று அறிவித்துள்ளனர். தொல்பொருள் விருப்பம் உள்ள சுற்றுலாவினர் காணத்தக்க ஊர்.

ஈரால்

எட்டையபுரத்திற்கு தெற்கில் உள்ள ஊர். பருத்தி, கம்பு, மிளகாய் சிறப்புப்பயிர்கள். பருத்தியும், மிளகாயும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. பருத்தி அறைக்கும் ஆலைகள் மிகுதி. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் சமாதி இவ்வூரில் உள்ளது.

ஈராச்சி

இவ்வூர் கைத்தறிக்கு புகழ்பெற்றது. சுற்றுவட்டாரங்களில் கூடும் சந்தைகளில் இவ்வூர் துணிகள் வாங்கப்படுகின்றன.

ஏரல்

இது ஒரு நகரப் பஞ்சாயத்து. தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் வாணிகச் சிறப்பு பெற்றது. கதர் உற்பத்திக்கும், வெண்கலப் பாத்திர தொழிலுக்கும் பெயர் பெற்ற இடம்.

உடன் குடி

உடன்குடி நகர பஞ்சாயத்து. ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடம். திங்கட் கிழமை சந்தை கூடுகிறது. பனைமரப் பொருட்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள் அதிகம். பனைவெல்லம் காய்ச்சுதல் இவ்வூரின் சிறப்புத்தொழில். பனைவெல்ல ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. பாய்முடைதல், வெங்காயக்கூடு முதலியவை முக்கியத் தொழில்கள். முஸ்லீம் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

காயல்பட்டினம்

பாண்டியரின் துறைமுகமாக விளங்கியது. மார்க்கோபோலோ இவ்வூரின் சிறப்பை புகழ்ந்து எழுதியுள்ளார். கால்டுவெல் இப்பகுதிகளைப் பற்றி விரிவாக ஆய்ந்து நூலெழுதியுள்ளார். இங்கு கிடைத்த காசுகள், சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 1937 வரை துறைமுகமாக செயல்பட்டு வந்தது. சீதக்காதி வாழ்ந்தவூர் என்று சொல்லப்படுகிறது. இந்நகரத்தினர் பலர் கொழும்பில் காசுக்கடை வைத்துள்ளனர். நகை வியாபாரமும் தோல் வியாபாரமும் இங்கு பலராலும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இங்குள்ள மசூதி அழகான முறையில் இந்தியக்கட்டடக்கலை மரபுடன் அமைந்துள்ளது.

குலசேகரப்பட்டினம்

திருச்செந்தூருக்கு 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆப்ரிக்காவில் மட்டுமே விளையும் பப்பரப்புளிய மரம் இங்கு காணப்படுவதால் ஆப்ரிக்காவுடன் வணிக உறவு இருந்ததை அறிய முடிகிறது. இராசேந்திர சோழன் கட்டிய கோவில் உள்ளது. சேரமான் பெருமாள் நாயனார் இங்கு சமாதியானதாகச் சொல்லப்படுகிறது. குலசேகரப் பாண்டியரிடம் இருந்த முஸ்லீம் வீரர்கள் வாழ்ந்த இடங்கள் மேல இராவுத்தர்மா பாளையம், கீழ ராவுத்தர்மா பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் பெரிய உப்பளங்கள் உள்ளன. முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள் வெங்காயக்கூடு, கோரைப்பாய் முதலியனவாகும். இங்கு கீரை, கத்தரிக்காய் இரண்டும் அதிகம். கூட்டுறவு தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது. எல்லை நாயக்கன் பட்டி
ஆடுவளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உள்ளது. ஆடும்-ஆட்டுத் தோலும் இங்கு முக்கிய வணிகப் பொருள்கள்.

கலியாவூர்

பாய் முடைதலும், நெசவும் கூட்டுறவு முறையில் சிறப்பாக நடைபெறுகிறது.
கருங்குளம்
பெருமாள் கோவிலால் இவ்வூர் சிறப்பு பெறுகிறது. இங்கு ஆனைக் கொம்பன் நன்கு விளைகிறது.

காந்தீஸ்வரம்

தாமிரபரணியும் அதன் கிளை நதிகளும் இவ்வூரை தீவாக ஆக்கியுள்ளன.
கொற்கை
பாண்டியர் தலைநகராகவும், துறைமுகப்பட்டினமாகவும் சிறந்திருந்த ஊர். சங்க இலக்கியங்கள் இங்கு முத்துக் குளித்தலை விவரிக்கின்றன. கால்டுவெல் முதன் முதலாக இவ்வூரில் புதைபொருள் ஆய்வு நடத்தி பழங்கால நாகரீகத்தைக் கண்டு வெளிப்படுத்தினார். தற்காலப்பெயர் உமரி மாநகர். இங்கு நெல், வாழை, வெற்றிலை, தென்னை, பனை மரங்கள் ஏராளம். சமணச் சிலையும், வன்னிமரமும் பழமையை நினைவூட்டுகின்றன. வெற்றிலையும், வாழையும் ஏற்றுமதியாகிறது.

கடம்பூர்

மணியாச்சியிலிருந்து 14கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பருத்தி அரைக்கும் ஆலைகளும், உரத் தொழிற்சாலைகளும் உள்ளன. 'கடம்பூர் போளி' புகழ் பெற்றது.

கழுகுமலை

சமணர்கள் இங்கே கழுவேற்றப்பட்டதாலும், கழுகுகள் தங்கும் மலை என்பதாலும் 'கழுகுமலை' எனப்பெயர் பெற்றது. சங்கரன் கோயில் - திருநெல்வேலிச் சாலையில், தேவர் குளத்திலிருந்து 22கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பெரிய தொழிலகங்கள் உள்ளன. சிறந்த துப்பட்டி (போர்வை) தயாரிக்கும் தொழிலகங்களும், பருத்தி அறைக்கும் ஆலைகளும் அம்பர் சர்க்கா உற்பத்தி நிலையமும், பெரிய சுண்ணாம்புக் கால்வாய்கள் இரண்டும் உள்ளன.
கழுகுமலையில் காணத்தக்கவை
முருகன் கோவில்
இக்கோவில் 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். இக்கோயில் பாடல் பெற்ற தலமாகும். முருகனை - கழுகுமலை கார்த்திகேயர், கழுகாசல மூர்த்தி, கந்தநாதன் என்றும் அழைக்கிறார்கள். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடியிருக்கிறார். அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சதர், முத்துசாமி பிள்ளை, பாரதியார் ஆகியோரும் பாடல்கள் பாடி உள்ளனர். இங்கு தைபூசம், பங்குனி உத்ரம், மாசிப்பெளணர்மி முதலிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பிள்ளையார் கோவில்
300 அடி உயர கழுகுமலையின் உச்சியில் பிள்ளையார் கோயில் உள்ளது. கார்த்திகை நாட்களில் விளக்கேற்றும் கம்பும் உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியில் புத்தர் சிலையும் ஏராளமான சமண விக்கிரங்களும், சுனையுடன் கூடிய சிறிய கோயிலும் உள்ளன.
சிவன் கோவில்
மலையின் மற்றொரு பகுதியில் மேலிருந்து கீழாகக் குடைந்து வெட்டப்பட்ட கோயிலாகையால் 'வெட்டுவான் கோயில்' என்றும் இது அழைக்கப்படுகிறது. 30 அடி ஆழத்தில் சதுரமாகப் பாறைக்குள் குடைந்து அதன் நடுப்பகுதியில் கோயில் உண்டாக்கப் பட்டிருக்கிறது. இக் கோயிலின் நீளம் 47 அடி; அகலம் 24 அடி; உயரம் 30 அடி கோபுரத்தின் உச்சியில் தாமரை இதழ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் பாண்டியரின் ஒற்றைக் கல் தளி ஆகும்; சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.
சக்கம்மா தேவி கோயில்
கட்டபொம்மன் குடும்பத்தாரின் குலதெய்வம் சக்கம்மாதேவி. நாட்டு விடுதலைக்கு பின் 10 நாள் திருவிழா, சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
கயிலாசநாதர் கோயில்
பசுவந்தனை என அழைக்கப்படும் இக்கேயிலில் சித்திரைத் திருவிழா சிறப்புறநடைபெறுகிறது.
சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்
புதூரில் உள்ள இக்கோவில், தேவாங்கர் சமூகத்திற்குரியது.
முத்தளபுரம் சிவன் கோயில்
ஆனிமாதம் திருவிழா நடைபெறுகிறது.

குறுமலை

இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மருத்துவ மலையின் பகுதி என இம்மலை கருதப்படுகிறது. இங்கு பல வகையான பச்சிலைகளும், மூலிகைகளும் காணப்படுகின்றன. இம்மலைக் காற்று நோய் தீர்க்கும் என நம்பப்படுகிறது. இம்மலை சுமார் 150 அடி உயரம் உள்ளது. அதன் மீது நீர் ஊற்று உள்ளது. மக்கள் மலைவளம் காண தை மாதத்தில் இங்கு வருவதுண்டு.
கடலை கைத்தறி நெசவுக்கும், துப்பட்டிக்கும் பெயர் பெற்ற ஊர்.

கயத்தாறு

திருநெல்வேலி-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் உப்போடை ஆற்றுக்கு அருகில் உள்ள இவ்வூரை கடம்பூர் இரயில் நிலையத்திலிருந்து சென்றடையலாம். இது வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம். அதற்காதாரமாக புளியமரமும், சில கற்களும் காணப் படுகின்றன. பாய் பின்னுதல், துணி நெசவு முக்கியத் தொழில்கள். கயத்தாற்றில் சிதலமடைந்த, கல்வெட்டுகள் உள்ள, சோழ மன்னர் கட்டிய, பெருமாள் கோவில் உள்ளது. இவ்வூரில் பெரும் பான்மையோர் கிருத்துவர்கள். 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம் உள்ளது.

ஓட்டப்பிடாரம்

தேசபக்தர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த ஊர். அவர் நினைவாக நினைவில்லம் ஒன்று உள்ளது. எட்டையபுரம் - தூத்துக்குடி; திருநெல்வேலி - வேம்பார் ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் குறுக்குச் சாலையின் தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. நீர்வளம், நிலவளம் மிகுந்தது. கட்டமொம்முவின் அமைச்சர் தானாபதிப்பிள்ளையின் வம்சாவளியினர் இங்குள்ளனர். கூட்டுறவு இயக்கம் திறம்ட செயலாற்றுகிறது. ஓட்டப்பிடாரி கோயிலாலே-ஓட்டப்பிடாரம் என வழங்கப்படுகிறது.
சேர்வைக்காரன் மடம்
தென்னை, மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்த செந்திலம்பலம் என்னும் ஊரில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்குகின்றனர்.
செவந்தியாபுரம்
மூக்குப்பொடி உற்பத்தியால் சிறப்புப் பெற்றது.

சாயர்புரம்

கிருத்துவத்தைப் பரப்ப வந்த சாமுவேல் சாயர் என்ற போர்ச்சுகீசியரால் இவ்வூர் சாயர்புரம் என்று அழைக்கப்படுகிறது. பண்ணை விளையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தமிழறிஞர் ஜி.யு.போப் 1844-இல் சாயர்புரம் செமினரி என்ற பள்ளியை தோற்றுவித்தார். இங்கு அவர் காலத்தில ஐரோப்பிய மொழிகள் பல கற்பிக்கப்பட்டன. 1930 முதல் போப் நினைவுப்பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. 1962-ஆம் ஆண்டு கல்லூரி தொடங்கப்பட்டது. போப் படித்த நூல்கள், பள்ளி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சாத்தான் குளம்
நாசரேத்திற்கு நேர் தெற்கே உள்ளது. கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது 'வியாழக்கிழமை சந்தை' புல், வைக்கோலுக்குத் தனிச் சந்தை உள்ளது. பனைவெல்லம், சர்க்கரை தயாரிப்பு சிறுதொழில் நடந்து வருகிறது. தமிழறிஞர் அ. இராகவன் பிறந்தவூர். செட்டிக் குளம் சுனை ஒன்று உள்ளது.
சாகுபுரம்
டால்மியா குடும்பத்தினரின் பெயரால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கு ஒரு இரசாயன தொழிற்சாலை உள்ளது.
திருக்கோளூர்
நம்மாழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வார் பிறந்த ஊர்.

திருச்செந்தூர்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. வழிபாட்டிற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருகை உள்ளது. கோவில் உக்கிரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப் படுகிறது. கோயிலில் வரகுணபாண்டியன் கல்வெட்டுக் காணக் கிடைக்கிறது. பாண்டியர்கள், பாளையக்காரர்கள், திருவிதாங்கூர் அரசர், சேதுபதிகள், நாட்டுக் கோட்டை செட்டியார்கள் முதலியவர்களுடைய உதவிகள் கோயிலுக்கு பல காலம் கிடைத்துள்ளது.
கடற்கரையில் இவ்வூர் உள்ளதால் 'திருச்சீர் அலைவாய்' என அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் சந்தனாமலையும், வேங்கடாசலபதி சந்நிதியும் சண்முக விலாச மண்டபமும் உண்டு. ஓங்கார வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் இக்கோயில் கோபுரத்தின் வேல் வடிவம் நெடுந்தூரத்திலிருந்து காணும்படி அமைக்கப் பபட்டுள்ளது. இங்குள்ள குகைக்கு வள்ளிகுகை என்று பெயர். இன்று கடற்கரையில் காணப்படும் கோயில், முன்பு மலை உச்சியில் இருந்தது. கடல் பெருகி மலை மூழ்கவே இன்று கடற்கரையில் இக்கோயில் காட்சி தருகிறது. செந்திலாண்டவர் கோயில் வெள்ளை மணற்கல் மீது கட்டப்பட்டுள்ளது.

நாழிக்கிணறு

ஒரு சதுர அடிப்பரப்புள்ள சிறு கிணற்றில் நன்னீரும், 14 சதுர அடி பரப்பளவு கொண்ட பெரிய கிணற்றில் உப்பு நீரும் கிடைக்கின்றன. ஒன்றின் நீர் மற்றொன்றுடன் கலப்பதில்லை.

மண்டபங்கள்

நீண்ட மண்டபங்கள் வாயிலிலும், கோயிலைச் சுற்றியும் அமைக்கப் பட்டுள்ளன. பக்தர்கள் தங்கி இளைப்பாறத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள கந்த சஷ்டி மண்டபம், பிள்ளையார் மண்டபம், பதினாறு தூண்களோடு அமைக்கப்பட்டுள்ள ஆனந்த விலாசமண்டபம் முதலியன குறிப்பிடத்தக்கவையாகும்.
செந்திலாண்டவர்
நின்ற திருக்கோலத்தில்-அபயம், வரதம், பூ செபமாலைகளை ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் மூலத்தானத்தில் ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. யாவரும் சுற்றிப் பார்த்து வரத்தக்க முறையில் இவை அமைந்துள்ளன.

விழாக்கள்

ஒவ்வொரு நாளும் திருவிழாக் கோலத்தைத் திருச்செந்தூரில் காணலாம். வெள்ளிக்கிழமை, கார்த்திகை விசாக நாள்களில் முருகனுக்கு தங்கக் கவசம் சார்த்தப்படும். வைகாசி விசாகம், ஆவணி மூலம், கந்தசட்டி, மாசி மகம், பங்குனி உத்திரம், ஆவணித் திருவிழாவில், முன்பக்கம் முருகவேள் உருவிலும், பின்பக்கம் நடராசர் உருவிலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

திம்மராஜபுரம்

இவ்வூர் மல்லிகைப்பூ, சிவந்திப்பூ, பிச்சிப்பூ, ரோஜாப்பூ ஏற்றுமதியில் புகழ் பெற்று விளங்குகிறது.
நாலாட்டின் புதூர்
பருத்தி விளைச்சல் மிகுதி. பருத்தி அரைக்கும் இயந்திரங்கள் பல உள்ளன.
விளாத்திக் குளம்
வட்டத் தலைநகர். இவ்வூரில் நெசவுத் தொழிலும் சாயத் தொழிலும் சிறப்புற நடந்து வருகிறது. கட்டமொம்முவுடன் தூக்கிலிடப்பட்ட வீரகஞ் செயதுரையும், இசையுலக மேதை விளாந்திக் குளம் - மலையப்பசுவாமிகளும் இந்த ஊர் பெருமக்கள்.

வேம்பார்

கத்தோலிக்கர் நிறைந்த கடற்கரையோர ஊர். கருப்பட்டி காய்சும் தொழிலால் இவ்வூர் புகழ் பெற்றது.
பாஞ்சாலங்குறிச்சி
வெள்ளையரை எதிர்த்து நின்ற பாளையக்காரன் கட்டபொம்மு வாழ்ந்த இடம். 1755-1800 வரை பல போர்களை கண்ட ஊர். இங்குள்ள கோட்டை வெள்ளையர்களால் இடிக்கப்பட்டது. கட்டமொம்முவை நினைவு கூறும் முகமாக தமிழக அரசால் இங்கு சிறுகோட்டை வடிவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அருகில் பழைய கோட்டையின் சிதலங்களைக் காணலாம்.

மணியாச்சி

விருது நகர் - தூத்துக்குடி வழியில் உள்ள இரயில் சந்திப்பு. இங்கு சைவ ஆதின மடம் உள்ளது. கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சி நாதன் கட்டுக் கொன்ற இடம் என்பதால், சுந்திரப்போராட்ட காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
புதூர் நாகலாபுரத்திலிருந்து 6 கி.மீ அருப்புகோட்டை இரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உளுந்தும், மல்லியும், வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பெருநாழி கடற்கரை ஊர். அழகான இடம். நீர் வளத்தால் நெல்லும் மணிலாவும் நன்றாக விளைகின்றன.
நாகலாபுரம் கட்டபொம்மக்கு உதவிய காரணத்தால் இவ்வூர் பாளையக்காரர் சாகும் வரை சென்னையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கு வியாழக்கிழமை சந்தை. இவ்வூரிலிருந்து தான் முதன்முதலாக பகலுணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

முடிசூடிவைத்தானேந்தல்

இவ்வூர் வேளாளர்களே பாண்டியர்களுக்கு முடி சூடுவார்களாம். அதன் காரணத்தாலே இவ்வூர் இப்பெயர் பெற்றது. இங்குள்ள சமண மேட்டில் சமண உருவச்சிலைகள் உள்ளன. பழைய கோட்டை ஒன்றின் சிதைந்த பகுதிகள் காணப்படுகின்றன.
பெருங்குளம் குளந்தை என்பது பழைய பெயர். தமிழின் முதல் நாவல்களில் ஒன்றாக 'பத்மாவதி சரித்திரம்' எழுதிய மாதவய்யா இவ்வூரை வைத்தே நாவலைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. நவதிருப்பதிகளில் ஒன்று. சிவ, விஷ்ணு கோயில்கள் உண்டு. பெருமாளுக்கு-மாயக்கூத்தர் என்றும்; சிவனுக்கு உத்தர வழுதீசுவரர் என்றும் பெயர். சிவன் கோயிலில் சங்கப் புலவர் 49 பேரின் சிலைகள் உள்ளன.
பேரூர் விவசாய செழிப்பு உள்ள ஊர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களும், களஞ்சியமும் இவ்வூரில் உள்ளன. வல்லநாடு மஞ்சளுக்கு புகழ் பெற்றது. நெல்லும், காய்கறிகளும் மிகுதி. நூல் நூற்பு, செங்கல் தொழிற்சாலையும் இங்குள்ளது.
பெரியதாளை கிருத்துவர்கள் நிறைந்த மீன்பிடி கிராமம். பரமன் குறிப்பு கருப்பட்டி உற்பத்திஉள்ள ஊர்.
மணப்பாடு மக்கள் அனைவரும் கிருத்துவர்கள். மணல் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. மீன்பிடிப்பு முக்கியத் தொழில். பனை ஓலையிலிருந்து பலவித பொருள்கள் இங்குச் செய்யப்படுகின்றன. தேவாலயத்திலுள்ள பலிபீடம் இத்தாலிய பளிங்குக் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
புன்னைக் காயல் புன்னை மரங்கள் நிறைந்த கடற்பகுதியாதலால் இப்பெயர் பெற்றது. கிருத்துவத்தின் வளர்ச்சி காரணமாக கல்வி, மருத்துவ மனைகள் வளர்ந்துள்ளன. முதல் கத்தோலிக்க தேவாலயம் 1551-இல் கட்டப்பட்டது.
நாசரேத் கிருத்தவ தேவாலயம் உள்ளது. கிருத்துவர்கள் நிறைந்த ஊர். பழங்காலப் பெயர் சாணார் பத்து.

ஸ்ரீவைகுண்டம்

தூத்துக்குடி சாலைக்கு வடக்கே கயிலாயபுரமும், தெற்கே வைகுண்டபதியும் உள்ளன. நலதிருப்பதிகளில் ஒன்று. பெருமாள் பெயர் கள்ளபிரான். சிற்பக்கலை சிறப்புடன் இக்கோயில் விளங்குகிறது. திருவேங்கடமுடையார் மண்டபத்தின் கதவுகள் ஏகாதேசி அன்று மட்டுமே திறக்கின்றன. கட்டபொம்மு போரில் இக்கோயில் கோட்டையாகப் பயன்படுத்தப்பபட்டது.

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: #தூத்துக்குடி - ஒரு வரலாற்று பார்வை
#தூத்துக்குடி - ஒரு வரலாற்று பார்வை
தூத்துக்குடி - ஒரு வரலாற்று பார்வை, Thuthukudi history , தூத்துக்குடி திருச்செந்தூர் மணப்பாடு கழுகுமலை ஒட்டப்பிடாரம் எட்டயபுரம் பாஞ்சாலங்குறிச்சி கயத்தாறு நவதிருப்பதிகள். திருச்செந்தூர் முருகன் கோவில் மணப்பாடு புனித சிலுவை ஆலயம் கழுகுமலை முருகன் கோவில் நவதிருப்பதிகள் திருவைகுண்டம் பெருங்குளம் வரகுணமங்கை திருப்புளியங்குடி தொலைவில்லி மங்களம் தென் திருப்பேரை திருக்கழுவூர், ஆழ்வார் திருநகர் சங்கு எடுத்தல் ஈரால் ஈராச்சி ஏரல் கோவில்பட்டி எட்டையபுரம் உடன் குடி காயல்பட்டினம் குலசேகரப்பட்டினம் கலியாவூர் காந்தீஸ்வரம் கடம்பூர் கழுகுமலை திம்மராஜபுரம் குறுமலை சாயர்புரம் வேம்பார் மணியாச்சி ஸ்ரீவைகுண்டம் முடிசூடிவைத்தானேந்தல் நாழிக்கிணறு மண்டபங்கள் கயத்தாறு ஓட்டப்பிடாரம்
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/05/blog-post_451.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/05/blog-post_451.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content