புதுக்கோட்டை அண்டக்குளம் சாலை பணிகளுக்கு வனத்துறை இடையூறு கலெக்டர் தலையீட்டால் மீண்டும் பணிகள் தொடர்ந்தது
புதுக்கோட்டை அருகே உள்ள மச்சுவாடியில் இருந்து அண்டக்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகே உள்ள வனப்பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணி பொக்ளின் எந்திரத்தின் உதவியுடன் நேற்று தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அதிகாரி ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள், தங்களிடம் முறையாக அனுமதி பெறாமல், சாலையை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதாகக்கூறி சாலையை அகலப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் வனத்துறை அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒப்பதந்ததாரர் தரப்பினர் அண்டக்குளம் சாலையில் பொக்ளின் எந்திரத்தை சாலையின் நடுவில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையில் ஒப்பந்ததாரர் தரப்பினர் இது குறித்து கலெக்டர் கணேஷ்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் வனத்துறை அதிகாரிகளிடம் சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் சாலை அகலப்படுத்தும் பணி பாதிக்கப்பட்டது. மேலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
COMMENTS