கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் தேசிய தலைவர்கள்: சென்னையில் தடபுடல் ஏற்பாடுகள்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வயது மூப்பின் காரணமாக தனது 95 வயதில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு துறையினரும் புகழஞ்சலிக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற பெயரில் புகழஞ்சலிக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியன் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சுரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி மாநில முதல்வர் நாரயணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி டெரிக் ஓ.பிரெய்ன், இந்திய யூனியன் மூஸ்ஸீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக, பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அக்கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்திற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீளம் 40 அடி அகலத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்கில் 15,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மைதானத்தில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டு 15,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேசிய தலைவர்களின் பாதுகாப்பிற்காக வருகை தரும் காவல்துறை அதிகாரிகள் தங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
COMMENTS