பெரியகுளம் கூட்டுறவு தேர்தலில் வேட்புமனுவை பரிசீலனை செய்யாமல் ஓட்டம் பிடித்த தேர்தல் அலுவலர் : காணவில்லை நோட்டீஸ் ஒட்டிய அமமுக..
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை கூட்டுறவு பண்டகசாலை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 30ல் நடந்தது. அதிமுக மற்றும் அமமுகவினர் வேட்புமனு தாக்கல் செயிதிருந்தனர்.
2.5.2018ம் தேதி வேட்புமனு பரிசீலனையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தேர்தல் அலுவலர் முருகேசன், இரு தரப்பையும் முறைப்படி வேட்புமனு பரிசீலனைக்காக வரும்படி அழைத்தார்.
நேற்று காலை 10 மணி முதல் அமமுகவினர் 15 பேர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வந்து தேர்தல் அலுவலருக்காக காத்திருந்தனர்.
அங்கு வந்த தேர்தல் அலுவலர் முருகேசன் முறைப்படி வேட்புமனு பரீசீலிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அமமுகவினருக்கும் தேர்தல் அலுவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தேர்தல் அலுவலர் முருகேசன், தேர்தல் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அமமுகவினர் அலுவலக கதவில் தேர்தல் அலுவலரை காணவில்லை என்று நோட்டீஸ் ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெரியகுளம் டிஎஸ்பியிடம் தேர்தல் அலுவலரை காணவில்லை என்று புகார் அளித்தனர். முறையாக நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி ஆறுமுகம் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
COMMENTS