திருச்சிராப்பள்ளிக்குப் புதிய சாலைப்பாதுகாப்புப் பயிற்சிப் பூங்கா
தொன்மையான திருச்சிராப்பள்ளி நகரில் பிரத்யேகமாக ஒரு சாலைப் பாதுகாப்புப் பூங்கா அமையவுள்ளது. இந்தப் பூங்கா சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான சமூகக் கடமையின் ஒரு அம்சமாக அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையிலான சாலைப் பாதுகாப்பு அறிவுரையைப் பரப்ப உள்ளது. இந்த சாலைப் பாதுகாப்புப் பயிற்சிப் பூங்காவானது உலகப் புகழ் பெற்ற இரு சக்கரத் தானியங்கி வாகனம் தயாரிக்கும் நிறுவனமான ஹோண்டாவின் உதவியோடு திருச்சியில் அமைக்கப்பட்டு வருகிறது. வாகன மேம்பாட்டில் பெரும் அக்கறை கொண்டுள்ள இந் நிறுவனம் சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டிலும் அக்கறை கொண்டுள்ளதால் நாடெங்கும் சாலைப் பாதுகாப்பு பயிற்சிப் பூங்காக்களை அமைத்து வருகிறது. இதுவரை 13 சாலை பாதுகாப்பு பயிற்சிப் பூங்காக்களை அமைத்துள்ளது. ஹோண்டா நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாகத் திருச்சியில் ஒரு பூங்காவினை அமைத்து வருகிறது. ஹோண்டாவின் கனவுச் சவாரி முனைப்புத் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியினைப் பெண் பயிற்சியாளர்களைக் கொண்டு நான்கே மணி நேரத்தில் பயிற்சி முழுமை செய்யவுள்ளது. இத் திட்டத்தில் அனைத்து வயதினரும் சேர்ந்து பயன் பெறலாம் என ஹோண்டா மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரபு நாகராஜ் தெரிவித்துள்ளார். இம் மாதிரியான பூங்காக்களை அமைத்து இந்தியாவை விபத்தில்லா நாடாக ஆக்குவதற்கான முயற்சி தான் இது என்றும் கூறியுள்ளார். திருச்சியில் அமையவுள்ள ஹோண்டாவின் 14வது சாலைப் பாதுகாப்புப் பயிற்சிப் பூங்காவானது திருச்சி மாநகராட்சி மற்றும் காவல் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ள திட்டமாகும். இருசக்கர வாகனங்கள் அதிகமாகவுள்ள முதல் மூன்று மாநிலங்களுள் ஒன்றான தமிழகத்தில் இதுவரை கோயம்புத்தூர் பூங்காவில் ஒரு லட்சம் பேருக்கு மேல் சாலைப் பாதுகாப்பு பயிற்சி வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது என்கிறார் நாகராஜ். அதேபோல தற்போது திருச்சியில் குழந்தைகள் சாலைப்பாதுகாப்புப் பயிற்சிப் பூங்கா ஹோண்டாவின் உதவியுடன் அமையவுள்ளது. ஹோண்டாவின் சிறப்புச் சாலைப் பாதுகாப்புப் பயிற்சியாளர்கள் 5 வயதுக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பான பயணத்திற்கான பயிற்சி அளிக்கவுள்ளனர். மேலும் வாகன பழகுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு சாலை விதிமுறைகள் பற்றியும், வாகனம் ஓட்டும் செய்முறைப்பயிற்சியும் திருச்சிராப்பள்ளி காவல்துறை உதவியுடன் வழங்கப்படவுள்ளது. நிரந்தர உரிமம் வைத்திருப்பவர்களும் இந்தப் பயிற்சியினைப் பெறலாம். இந்தப் புதிய சாலைப் பாதுகாப்புப் பயிற்சிப் பூங்கா பாதுகாப்பான சூழலில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்தப் பூங்காவில் சிறுவர்களுக்கென்றும், வயது வந்தவர்களுக்கென்றும் இரண்டு பகுதிகள் இருக்கும். குழந்தைகளுக்கென பயிற்சிக்குரிய அம்சங்களும், பள்ளிப் பேருந்துகளுக்கான சாலைப்பாதுகாப்பு அம்சங்களும் இதில் அடங்கும். 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாகனங்களைச் சாலையில் ஓட்டுவதற்கான முன் நூற்றுக்கும் மேற்பட்ட சாலை ஆபத்துகளை அறிந்துகொள்ளும் மெய்நிகர் காணொளி மூலம் பதின்மர்களுக்கான பயிற்சி சுவாரஸ்யாமாக அமையப்படவுள்ளது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு உடற்பயிற்சி இடம் மற்றும் வேடிக்கையாகத் தமது திறமையைப் பரிசோதித்துக் கொள்ளும் குறுகலான வழித்தடமும் உள்ளது. பெண்களுக்கான வாகனம் ஓட்டும் கனவு நிறைவேறும் முயற்சி, ஆண் பெண் இருபாலருக்கும் சரியான வாகனம் ஓட்டும் வழிமுறைகள் ஆகியன பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்கள், போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைப்பார்கள்.ஹோண்டாவின் இந்த முயற்சியை வரவேற்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இந்த முயற்சி வெற்றி பெற மாவட்ட நிர்வாக அனைத்து உதவியையும் செய்யும் என உறுதியளித்துள்ளார். திருச்சிமாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் இந்தப் பூங்கா பாதுகாப்பு அம்சங்களை மக்களுக்கு முழுமையாக விளங்க வைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் ஹோண்டாவின் சாலைப் பாதுகாப்பு பயிற்சித் திட்டத்தினைப் பாராட்டி கருத்து கூறும்போது படிப்படியாக இந்தத் திட்டத்தினைப் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக புதுக்கோட்டையிலும் நிறைவேற்ற வேண்டும் என்று ஹோண்டா நிறுவனத்திடம் வலியுறுத்தியதோடு சாலைப்பயிற்சிப் பூங்கா புதுக்கோட்டையில் நிறைவேற்ற வேண்டிய உதவிகளை செய்வோம் என்று எங்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என்று கூறினார்.
Please
COMMENTS