திருஞானசம்பந்தர் திருப்பதிகம்
🔥திருவண்ணாமலை🔥
பண் – நட்டபாடை
பாடல் எண் : 1
உண்ணாமுலை உமையாளொடும் உடன்ஆகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ஆர்ந்தன அருவித்திரள் மழலைம்முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
பொழிப்புரை
உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.
பாடல் எண் : 2
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை இலரே.
பொழிப்புரை
கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக்கருதி மர நிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.
பாடல் எண் : 3
பீலிம்மயில் பெடையோடுஉறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவார்அன புகழே.
பொழிப்புரை
தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்).
பாடல் எண் : 4
உதிரும்மயிர் இடுவெண்தலை கலனாஉலகு எல்லாம்
எதிரும்பலி உணல்ஆகவும் எருதுஏறுவது அல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்குஇடம் அண்ணாமலை அதுவே.
பொழிப்புரை
உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு, உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு, முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித்திருவடிகளில் அதிரும் வீரக்கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.
பாடல் எண் : 5
மரவம்சிலை தரளம்மிகு மணிஉந்துவெள் அருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்
உரவம்சடை உலவும்புனல் உடன்ஆவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
பொழிப்புரை
வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?
பாடல் எண் : 6
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும்மிடறு உடையார்,கமழ் சடையார்கழல் பரவி,
உருகும்மனம் உடையார்தமக்கு உறுநோய்அடை யாவே.
பொழிப்புரை
பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத்தோன்றிய நஞ்சை உட் கொள்ளும் அளவிற்குத்துணிபுடையவரும், அந்நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.
பாடல் எண் : 7
கரிகாலன குடர்கொள்வன கழுதுஆடிய காட்டில்,
நரிஆடிய நகுவெண்டலை உதையுண்டுஅவை உருள
எரிஆடிய இறைவர்க்குஇடம், இனவண்டுஇசை முரல
அரிஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.
பொழிப்புரை
கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசை பாடச் செவ்வரிபரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.
பாடல் எண் : 8
ஒளிறூபுலி அதள்ஆடையன், உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித்து உரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன், இராவணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.
பொழிப்புரை
ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.
பாடல் எண் : 9
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேல்உறை கேடுஇல்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவன்அடி சரணே.
பொழிப்புரை
விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.
பாடல் எண் : 10
வேர்வந்துஉற, மாசுஊர்தர, வெயில்நின்றுஉழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின், அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல்ல கழல்சேர்வது குணமே.
பொழிப்புரை
உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக்கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலான குணம்.
பாடல் எண் : 11
வெம்புஉந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ எயில்எய்தவன் அண்ணாமலை அதனைக்
கொம்புஉந்துவ குயில்ஆலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
பொழிப்புரை
வெம்மை மிக்க கதிரவன் ஒளி புகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு, குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.
திருச்சிற்றம்பலம்

COMMENTS